கடலில் கொட்டப்பட்ட 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்கள்.. இரண்டாம் உலகப்போர் அப்போ நடுநடுங்க வச்ச சம்பவம்.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரின் போது, பால்டிக் கடலில் கொட்டப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கடல் வாழ் சுற்றுச் சூழலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
பால்டிக் கடல்
உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஒரு பகுதிதான் இந்த பால்டிக் கடல். ரஷ்யா, டென்மார்க், போலந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே பரவிக்கிடக்கும் இந்த கடல் பல மர்மங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் ஐரோப்பா முழுவதையும் பிடிக்க ஹிட்லரின் படைகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டன. அப்போது, அதி பயங்கரமான ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வந்தது ஜெர்மனி.
இருப்பினும் ஹிட்லரின் மறைவுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அப்போது, நாஜி படையினரிடம் இருந்த ரசாயன ஆயுதங்களை அழிக்க இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டன.
கடலில் கொட்டப்பட்ட ஆயுதங்கள்
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியனை உள்ளடக்கிய பிரத்யேக முத்தரப்பு ஆணையத்தின் முடிவால் நாஜி இரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலில் கொட்டப்பட்டன. இதனையடுத்து பால்டிக் கடலில் மையப் பகுதியான Gotland Basin-ல் ஆயுதங்கள் மூழ்கடிக்கப்பட்டன. பின்னர், Bornholm Basin-ல் 40,000 டன் ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக சோவியத் யூனியனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இறுதியாக போலந்தின் வடக்கு பகுதியில் உள்ள Gdansk Basin -ல் மீதமிருந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன.
ஆய்வு
இந்நிலையில், பால்டிக் கடலில் போலந்து அறிவியல் அகாடமி கடந்த 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் உலகையே ஸ்தம்பிக்க செய்திருக்கின்றன. கடலில் கொட்டப்பட்ட இந்த மஸ்டர்ட் வாயு குண்டுகள் 70 மீட்டர் சுற்றளவு வரை கடலை மாசுபடுத்துகின்றன எனவும் நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இதனால் பெரும் தாக்கத்தினை சந்தித்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பால்டிக் கடற்பரப்பில் குவிக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள், பீப்பாய்கள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயதங்களின் சரியான அளவை மதிப்பிடுவது கடினம் என்றாலும், அவை 40,000 முதல் 100,000 டன் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்