‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தந்தை மறந்து காரிலேயே விட்டுச் சென்ற இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மறந்து காரிலேயே விட்டுச் சென்ற தந்தை..’ ஒரு வயதே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஜுவான் ரோட்ரிக்ஸ் , மரிசா என்ற தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற இரட்டைக் குழந்தைகளும் இருந்துள்ளனர். இருவரும் வேலைக்குச் செல்லும் முன் குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 3 குழந்தைகளுடன் கிளம்பிய ஜுவான் 4 வயது மகனை மட்டும் ஒரு மையத்தில் விட்டுள்ளார். பின் இருக்கையில் இரட்டைக் குழந்தைகள் இருந்ததை மறந்துவிட்டு நேராக வேலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் எப்போதும்போல பணி முடிந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிய ஜுவான் எதேச்சையாக பின் இருக்கையைப் பார்த்தபோது குழந்தைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி பின் இருக்கையில் பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளன. உடனடியாக அவர் போலீஸாருக்கு கால் செய்து உதவி கேட்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். குழந்தைகளைப் பரிசோதித்த போலீஸார் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து நடந்த மருத்துவப் பரிசோதனையில் எட்டு மணி நேரமாக காரிலேயே இருந்த குழந்தைகள் வெப்பம் தாங்காமல் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஜுவானைக் கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பேசிய ஜுவான், “வேலைக்குச் செல்லும் முன் குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டதாகவே தோன்றியது. முற்றிலும் வெறுமையாக உணர்கிறேன். என்னுடைய குழந்தைகள் இறந்துவிட்டன. நானே அவர்களைக் கொன்றுவிட்டேன்” எனக் கதறி அழுதுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜுவானின் மனைவி மரினா, “நடந்தவை எல்லாம் கெட்ட கனவு போல உள்ளது. குழந்தைகள் இறந்துவிட்டார்கள் என நம்ப முடியவில்லை. நான் நினைத்ததை விட அதிகமாகக் காயமடைந்துள்ளேன். இன்னும் என் கணவரைக் காதலிக்கிறேன். அவர் ஒரு நல்ல தந்தை. எங்கள் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் அவர் எதையும் செய்ய மாட்டார். இந்த இழப்பிலிருந்து என்னால் மீண்டு வரவே முடியாது. என் கணவரும் அவர் செய்த தவறுக்கு அவரை மன்னித்துக்கொள்ள மாட்டார் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார். ப்ரான்க்ஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜுவான், விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

AMERICA, US, NEWYORK, FATHER, TWINBABIES, SHOCKING, HOTCAR