‘இன்றுடன் முடியும் காலக்கெடு’!.. நாளை முதல் பேஸ்புக், ட்விட்டர் இயங்குவதில் சிக்கலா..?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளத்துக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணிநேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என்றும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்யும் வகையில், சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். நீதிமன்றங்கள், அரசுக்கு, அந்த பயனரின் தகவல்களை வழங்க வேண்டும் என்பதையும் இந்த புதிய நடைமுறையில் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதிமுறைகளை நடைமுறை படுத்துவதற்கு 3 மாதங்கள் அவகாசமும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான காலக்கெடு இன்றுடன் (25.05.2021) முடிவுக்கு வருகிறது. புதிய விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்திருந்தது. ஆனாலும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இன்னமும் இணங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த நிறுவனங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப் போகிறது என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்பத்தின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் சில விஷயங்கள் குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதோடு, செயல்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துதல் தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களது தளத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்தும் திறனில் பேஸ்புக் உறுதியாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்