சின்ன பசங்கலாம் கூட பாக்குறாங்க சார்...! உடனே இதுக்கு 'ஒரு முடிவு' கட்டியாகணும்...! - டாக்சிக் மதனை தொடர்ந்து 4 யூ-டியூபர்கள் மீது புகார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டாக்சிக் மதனை தொடர்ந்து யூ-டியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது ஆபாசமாக பேசுவதாக பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
யூடியூப்பில் கேம்மிங் சேனல் மூலம் ஆபாசமாகவும், தரகுறைவாகவும் பேசி வந்து பல மோசடிகளில் ஈடுபட்ட பிரபல யூடியூப் மதன் கைது செய்யப்பட்டத்தை அடுத்து யூ-டியூபர்கள் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திவ்யா கள்ளச்சி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பலர் கூறிவந்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் முஹைதீன் இப்ராகிம் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் இவர்களை குறித்து புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், 'சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசும் காணொலிப் பதிவுகள் அதிகளவில் வலம் வருகின்றன.
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதுபோன்ற வீடியோக்கள் பல யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கிறது.
அதேபோல் அப்பாவி மாணவர்களையும், இளைஞர்களையும் வைத்து சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, 'ரவுடி பேபி' சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் போன்ற பலர் ஆபாசமாக பேசி பல்வேறு காணொலிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் வரும் அவர்களின் பேச்சு, உடல் பாவனைகளும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதனைப் பார்க்கும் சிறுவர், சிறுமிகளின் மனது, இதே தான் சரி என நினைத்து அந்த செயல்களை பின்தொடரும் அபாயமும் உள்ளது.
இதுபோன்று இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணைய தளங்களைக் கண்டறிந்து, அவற்றை தடை செய்ய வேண்டும். அதோடு மட்டும் நிற்காமல், நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற பதிவுகள் இனி தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்