ஆற்று பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்... அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்... சில நிமிடங்களில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே ஆற்றில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்திற்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நேற்று மாலை வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த இளைஞர், சுமார் 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்கும் பணியில் இறங்கினர். அரை மணி நேரம் தேடலுக்குப் பின்னர், பவானீஸ்வரர் ஆலயம் அருகே நீரில் குதித்த அந்த இளைஞரை சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் குறித்த புகைப்படத்தை வாட்ஸ் ஆப் குழுவில் போலீசார் பகிர்ந்தனர். அதில் இந்த இளைஞர், ஆசனூர் மலைப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.
60 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தபோது ஏற்பட்ட காயத்தால் இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது. பவானி ஆற்றுப்பாலத்தில் 3 பேர் நின்று பேசிக் கொண்டிருந்ததாவும், அதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், இருவர் சென்றுவிட்ட நிலையில் மதுபோதையில் இருந்த இளைஞர் பவானி ஆற்றில் குதித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.