'நீ பிரசவ வலியில துடிப்ப, அப்போ உன் கைய கெட்டியா புடிச்சிக்கணும்'... 'ஆசைப்பட்ட கணவர்'... நொறுங்கி போன கனவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியின் பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட கணவன் எடுத்த முடிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ராகினி என்கிற ரோஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஜூன் 20 தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் காஞ்சிபுரத்தில் வசித்து வந்த நிலையில், ரோஜா கர்ப்பமானார். இதையடுத்து தாம்பரத்தில் உள்ள ரோஜாவின் வீட்டிற்கு அவரை அவரது கணவர் விக்னேஷவரன் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாளில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என ரோஜா தனது கணவருக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தோசத்தின் உச்சத்திற்குச் சென்ற விக்னேஷவரன், பிரசவ நேரத்தில் உன்னுடன் இருப்பேன், உனது கையை புடிச்சிப்பேன் என மனைவியிடம் கூறியுள்ளார்.
இந்தச்சூழ்நிலையில் சென்னை செல்ல இ -பாஸ் வேண்டி விக்னேஷவரன் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவருக்கு இ -பாஸ் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் வருடத் திருமண நாள் வந்துள்ளது. அப்போதும் மனைவியுடன் இருக்க முடியவில்லையே என மிகுந்த மன வருத்தத்திலிருந்துள்ளார். இதற்கிடையே இன்று காலை ரோஜா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவ வலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலைத் தெரிவிப்பதற்காக ரோஜாவின் உறவினர்கள் விக்னேஷ்வரனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு அருகில் இருக்கும் அவரது நண்பருக்குத் தகவலைத் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் உடனே விக்னேஸ்வரனை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
வீட்டிலிருந்த அறையில் விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து காஞ்சி காவல் துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பிரசவத்தின் போது மனைவியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்