புது மனைவியைத் தவறாகப் பேசியதால் நண்பனை தாக்கி கொலை செய்து, கிணற்றில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த 17-ம் தேதி காலையில் கூவாகம் நத்தம் கிராம எல்லையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சுமார் 75 அடி ஆழத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆனந்தராஜ், ஹரி, ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற கொள்ளையனும், அய்யனாரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. மாரிமுத்துவுக்கு திருமணம் முடிந்த 10-வது நாள், திருட்டு வழக்கு தொடர்பாக கடலூர் மத்திய சிறையில் அவரை அடைத்தனர். பின்னர் கடந்த மாதம் 5-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த மாரிமுத்துவிடம் அவரது மனைவி பற்றி டாக்சி டிரைவர் அய்யனார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டநிலையில், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, நண்பர்களின் உதவியுடன் அய்யனாரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் சென்னையிலிருந்து அய்யனாரை வரவழைத்து, மாரிமுத்து உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, அய்யனாரை கிணற்றில் பிடித்து தள்ளி கொலை செய்துவிட்டு, அய்யனார் தற்கொலை செய்ததுபோல் மாற்றிவிட்டு, தப்பிச் சென்றனர். இருவரை கைதுசெய்துநிலையில், 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.