'ஸ்கேனில் தெரிய வந்த பிரச்சனை'... 'வாழ்க்கை பூரா இப்படியே தான் இருக்கணுமா'... 'துயரத்தோடு வந்த இளம்பெண்'... மாஸ் காட்டிய சென்னை அரசு மருத்துவமனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்ற அளவிற்கு இளம்பெண்ணின் பிரச்சனையைச் சரி செய்து சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

'ஸ்கேனில் தெரிய வந்த பிரச்சனை'... 'வாழ்க்கை பூரா இப்படியே தான் இருக்கணுமா'... 'துயரத்தோடு வந்த இளம்பெண்'... மாஸ் காட்டிய சென்னை அரசு மருத்துவமனை!

சென்னை மணலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். 25 வயதான இவருக்குத் திருமணமான சில மாதங்களிலேயே உடல் சோர்வு, தலைவலி, வயிற்று ஏற்பட்டு அவதி பட்டுவந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் துவங்கிய நிலையில், அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது.

25 வயதிலேயே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காகச் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனை இயக்குநர் விமலா, நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோரது உத்தரவின்படி, மருத்துவர்கள் பக்தவத்சலம், பார்த்தசாரதி மேற்பார்வையில் நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் தளவாய் சுந்தரம் குழுவினர் ஆசிரியைக்குத் தேவையான பரிசோதனைகளைச் செய்தனர்

அதில் குணப்படுத்தக்கூடிய உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், சிறுநீரகம் அருகே உள்ள அட்ரினல் சுரப்பியில் (Adrenal Gland) கட்டி இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் தளவாய் சுந்தரம் குழுவினர் சிறுதுளை மூலம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து, கட்டியுடன் அட்ரினல் சுரப்பியை அகற்றினர். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு ரத்த அழுத்தப் பிரச்சனை நீங்கி ஆசிரியை தற்போது நலமுடன் உள்ளார்.

இதுகுறித்து பேசிய நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர் தளவாய் சுந்தரம், ''ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தால் அதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதைக் கவனிக்காமல் விடும் பட்சத்தில் மாரடைப்பு வரும் அபாயம் உள்ளது. த்த அழுத்தத்தில் குணப்படுத்தக்கூடியது மற்றும் குணப்படுத்த முடியாத வகைகள் உள்ளன. ரத்த அழுத்தம் இருந்தால் முதலில் பரிசோதனை செய்து எந்த வகை என்பதைக் கண்டறிய வேண்டும்.

குணப்படுத்த முடியாத ரத்த அழுத்தமாக இருந்தால் மாத்திரை சாப்பிடலாம். குணப்படுத்தக்கூடியதாக இருந்தால் உரியச் சிகிச்சை பெற வேண்டும். அப்படி சிகிச்சை பெற்றால் 95 முதல் 100 சதவீதம் குணப்படுத்திவிடலாம். வாழ்நாள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியது இல்லை. தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள ஆசிரியைக்கு, குணப்படுத்தக்கூடிய, உப்பு அதிகமாகச் சுரக்கும் ரத்த அழுத்தம் இருந்தது.

அட்ரினல் சுரப்பியில் கட்டி இருந்ததுதான் இதற்குக் காரணம். லட்சத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பாதிப்பு இருக்கும். அதனால், கட்டியுடன் அட்ரினல் சுரப்பியையும் அகற்றிவிட்டோம். சிறுநீரகத்தைப் போன்று அட்ரினல் சுரப்பியும் 2 உள்ளன. ஒன்றை அகற்றிவிட்டாலும் மற்றொரு அட்ரினல் சுரப்பி செயல்படும். சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சினை சரியாகிவிட்டது. இனிமேல் அவர் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

உப்பு அதிகம் சுரந்ததால் குறைந்திருந்த பொட்டாசியம் அளவும் சமநிலைக்கு வந்துவிட்டது. எனவே, உடல் சோர்வும் நீங்கிவிட்டது. தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்