‘100 நாளில் 'Double Amount' கிடைக்கும்’... ‘இளம் தம்பதி மற்றும் குடும்பமே சேர்ந்து’... ‘பல கோடிக்கு ரூபாய்க்கு’... 'சேலத்தில் நடந்த சதுரங்க வேட்டை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, சுமார் 350 பேரிடம், ரூ.100 கோடி அளவில், இளம் தம்பதி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘100 நாளில் 'Double Amount' கிடைக்கும்’... ‘இளம் தம்பதி மற்றும் குடும்பமே சேர்ந்து’... ‘பல கோடிக்கு ரூபாய்க்கு’... 'சேலத்தில் நடந்த சதுரங்க வேட்டை’!

சேலம் ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள், மணிவண்ணன் (38) - இந்துமதி (33) தம்பதியினர். இவர்கள், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தனர். இவர்களது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், 100 நாளில், இரு மடங்காக தருவதாகவும், நீண்ட நாள் முதலீட்டுக்கு, 25 சதவிகித வட்டி தருவதாகவும், மணிவண்ணன் அறிவித்தார். அத்துடன், ஊறுகாய், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றுக்கு, பகுதி வாரியாக வினியோக உரிமையை வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.

அதிகளவில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு, வெளிநாடு சுற்றுலா, உயர் ரக கார் பரிசாக வழங்குவதாக அறிவித்து, முதலில் சிலருக்கு மட்டும் வழங்கியுள்ளார்.. அதையே, கவர்ச்சிகர விளம்பரமாக வெளியிட்ட அவர், நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பி, பல்வேறு நகரங்கள், வெளி மாநிலங்களிலிருந்து, ஏராளமானோர் கோடி, கோடியாக முதலீடு செய்ததாகத் தெரிகிறது. இப்படி வாங்கிய பணத்தை, தனது டேபிள் முழுவதும் வரிசையாக அடுக்கி, புகைப்படம் எடுத்து, அதனை முதலீடு செய்தவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி, அலுவலக ஊழியர் சரஸ்வதி உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் இவர்கள் பணம் வசூல் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் பல கோடிக்கு மேல் வசூலித்த அந்நிறுவனத்தினர், 2018-க்கு பின் தலைமறைவாகினர். இதையடுத்து, மணிவண்ணன் மீது, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன் ஜாமீன் பெற்று, தப்பித்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் மோசடி செய்த பணத்தில், மணிவண்ணன் வெளிநாடுகளுக்கு, அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் துபாய்க்கு சென்ற மணிவண்ணன்-இந்துமதி தம்பதியினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மணிவண்ணன், இந்துமதி தம்பதியை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் ரியல் எஸ்டேட் அதிபர், அரிசி வியாபாரி, அச்சக உரிமையாளர் உள்ளிட்ட ஏராளமானோர், கோடி கோடியாக ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற போலி நிறுவனம், மோசடி பேர் வழிகளிடம், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர்கள் கூறும் பொய் வாக்குறுதியை நம்பி, பணம் முதலீடு செய்து, மக்கள் ஏமாற வேண்டாம் என்று, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

SALEM, COUPLE, CHEATING, FRAUD, MONEY