கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸில் புழுவா..? திருப்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய குளுக்கோஸில் புழுவா..? திருப்பூர் மருத்துவமனையில் பரபரப்பு..!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ஜெகன். அவரது மனைவி தேவி. கர்ப்பமாக இருக்கும் தேவியை அப்பகுதியில் உள்ள தாய்சேய் நல விடுதிக்கு அவரது கணவரும், சகோதரர் ஜோசப்பும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு தேவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் தேவிக்கு குளுக்கோஸ் ஏற்ற சொல்லியுள்ளனர்.

இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியரும் தேவிக்கு குளுக்கோஸ் ஏற்றியுள்ளார். அப்போது குளுக்கோஸ் பாட்டிலில் புழு ஒன்று மிதந்தாக கூறப்படுகிறது. இதனைக் கவனித்த ஜோசப் உடனே இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தேவியை அவரது கணவரும், சகோதரரும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த புகார் குறித்து தெரிவித்த திருப்பூர் மாநகர் நல அதிகாரி பூபதி,  ‘தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மூலமாக குளுக்கோஸ் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் தூசு மிதந்தாக தெரிவித்துள்ளனர். புழு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அந்த மருத்துவமனைக்கு வந்த குளுக்கோஸ் பாட்டில்கள் அனைத்தும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு கழகத்தில் பரிசோதனை செய்வதற்காக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

HOSPITAL, TIRUPPUR, PREGNANT, GLUCOSE, WORM, WOMAN