'BE படிச்சிட்டு வேலை பாக்குறேன்'... 'வாங்குற சம்பளம் இதுக்கே போகுது'... 'போன வருஷம் வீடியோ காலில் வச்ச கோரிக்கை'... இன்று அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆளுநர் உரை பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் 16வது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடருக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு மற்றும் செயலாளர் ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். ஐடி கார்டு பெற்ற கொரோனா இல்லாத எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்த ஆளுநர், ’’தமிழ் இனிமையான மொழி; எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’’ என்று கூறி உரையைத் தொடங்கினார். பின்னர் அரசின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய ஆளுநர், ''பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அதிக முக்கியத்துவம் வழங்கப்படும், எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவிக்கும் பொருட்டு, பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டந்தோறும் நிறுவப்படும்'' எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கடந்த வருடம் இந்த கோரிக்கை தொடர்பாக இளம்பெண் ஒருவர் முதல்வர் ஸ்டாலினிடம் வீடியோ கால் வழியாகப் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், நான் BE படித்து விட்டு வேலை பார்க்கிறேன். தற்போது வேலை நிமித்தமாகத் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளேன். ஆனால் அதற்கான மாத செலவு அதிகமாக இருப்பதால், நான் வாங்குகின்ற சம்பளத்தை என்னால் வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை. எனவே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை செய்யும் பெண்களுக்காக அரசு விடுதி கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் உரையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி வருகிறார்கள்.
வேலை பார்க்கும் பெண்களுக்கான தங்கும் விடுதி கோரிக்கை கடந்த ஆண்டு வைக்கப்பட்டது. இந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.. செம்ம ல 👌 pic.twitter.com/SXvnJgCxhC
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) June 21, 2021
மற்ற செய்திகள்