'தீபாவளிக்கு போனஸ் கொடுத்தோம்'...'ஊருக்கு போனாங்க'...இப்படியா பண்றது?...அதிர்ச்சியில் நிறுவனங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகைக்கு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வராததால் நிறுவன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நூல்மில், நிட்டிங், சலவை பட்டறை, சாயமேற்றுதல், பிரிண்டிங், கம்பேக்டிங் ஆகியவற்றைக் கடந்து கட்டிங், எம்ப்ராய்டிங், தையல், பட்டன், செக்கிங், அயர்ன், பேக்கிங் என்று பல கட்டங்களின் வழியாக பின்னலாடை உற்பத்தி முழுமையடைகிறது. இந்த பணிகளில் நூற்றுக்கணக்கான பெரும் நிறுவனங்களும், சுமார் 6 ஆயிரம் சிறு நிறுவனங்களும் திருப்பூரில் இயங்கி வருகின்றன.
இதனிடையே கடந்த 27ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடந்த மாதம் 25ம் தேதி தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கி விடுமுறை அளித்தது. இதனால் அங்கு பணி புரியும் தொழிலாளர்கள், குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதில் பல வட மாநில தொழிலாளர்களும் அடக்கம்.
இந்நிலையில் தீபாவளி முடிந்து 9 நாட்கள் ஆன நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் 40 சதவீதம் பேர் இன்னும் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். திருப்பூரில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளவர்கள் மட்டுமே வேலைக்கு திரும்பியுள்ளனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகள், திருமணம் ஆகாத வாலிபர்கள் இதுவரை திருப்பூருக்கு திரும்பி வரவில்லை. மேலும் 20 சதவீதம் பேர் சம்பள உயர்வு, போனஸ் பிரச்னை போன்றவற்றால் வேறு நிறுவனங்களுக்கு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தங்களுடைய நிறுவன வேலைக்கு வருவார்களா? இல்லை வேறு நிறுவனங்களுக்கு செல்வார்களா? என்ற தகவல் எதுவும் தெரியாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.