'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'?...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது காதலனை வைத்து திட்டம் போட்டு பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'?...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை!

சென்னை அயனவரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாட்டினை செய்தனர். திருமண வேலைகள் தடாலடியாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், மணமகனின் மொபைல் எண்ணிற்கு தொடர்ச்சியாக போட்டோ வந்து கொண்டிருந்தது. அது புது எண்ணாக இருந்ததால் மணமகன் அது என்ன போட்டோ என்பதை வாட்ஸ்அப்பில் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த போட்டோவை பார்த்த மணமகன் அதிர்ச்சியில் உறைந்து நின்றுள்ளார்.

வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம் தான் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண் வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த மணமகன் திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் பெண்ணின் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதையடுத்து அடுத்த நாளே உறவுக்கார பெண் ஒருவருடன் அந்த இளைஞருக்கு  திருமணமும் நடைபெற்றது.

இந்நிலையில் மாப்பிள்ளையின் வீட்டிற்கு யார் புகைப்படங்களை அனுப்பி இருப்பார் என யோசித்துக் கொண்டிருந்த பெண்ணின் தந்தை நடந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் எந்த எண்ணில் இருந்து புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என ஆய்வு செய்தனர். அந்த எண்ணின் உரிமையாளரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் நடக்கவிருந்த பெண்ணும், புகைப்படங்களை அனுப்பிய இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் காதலை ஏற்காத பெற்றோர், அவருடைய விருப்பத்திற்கு எதிராக  திருமண ஏற்பாடுகளை  செய்துள்ளனர். இதனால் எப்படியாவது திருமணத்தை நிறுத்த திட்டமிட்ட அந்த பெண், தனக்கு பார்த்த மாப்பிள்ளையின் எண்ணை தன் காதலனுக்கு அனுப்பி, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பச் சொல்லியுள்ளார். அதன்படியே காதலித்த இளைஞரும் புகைப்படங்களை அனுப்பி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாத காவல்துறையினர் இருவரையும் அனுப்பி வைத்தனர். திருமணங்கள் நிச்சயிக்கப்படும் முன்பு திருமணம் செய்து கொள்வோரின் சம்மதம் முதலில் முக்கியம் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

WHATSAPP, CHENNAI, MARRIAGE, GROOM, LOVER, PHOTOS