'எங்க வாழ்க்கைய சீரழிச்ச 'ஹெச்.ஆர்'...'கதறிய இளைஞர்கள்'...சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் என 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன பெண் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அஜிஸ்முல்க் தெருவில் `இ - ஜாப்ஸ்' என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு மார்ச் மாதம் முதல் நிறுவனம் செயல்பட்டுவந்தது. இதில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் கைநிறைய சம்பளம் என ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் இருந்த இளைஞர்கள் பலர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள்.
இ - ஜாப்ஸ் நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆன அருணா ஹன்சிகா என்பவர், வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களிடம், வேலைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கூறினார். இதனைத்தொடர்ந்து விண்ணப்பித்த இளைஞர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலித்ததோடு, குறிப்பிட்ட இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து கொண்டனர்.
இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஆர்வமாக இருந்த இளைஞர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வந்த தகவல், அந்த இளைஞர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இ-ஜாப்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு அதன் ஹெச்.ஆர். அருணா மற்றும் நிறுவனத்தை நடத்திவந்த நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமறைவானார்கள்.
இதற்கிடையே பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் அருணாவை தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அந்த இளைஞர்களிடம் பேசிய அருணா ''வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை என்றால் உங்களின் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம்'' என கூறிக்கொண்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே பணத்தை தொலைத்த அப்பாவி இளைஞர்கள் சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அருணாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிரூபன் சக்ரவர்த்தியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.