'அக்கா முகத்தை பாருங்க'... 'அவங்க ரொம்ப நல்லவங்க'... 'ஜிம்க்கு வரும் பெண்களுக்கு விரித்த வலை'... கடைசியா வெளிவந்த அக்காவின் உண்மை முகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள பள்ளேரி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா. 33 வயதான இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்துத் தங்கி உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று வந்துள்ளார். அப்போது அவர் செல்லும் உடற்பயிற்சி கூடத்திற்கு அதிகமான பெண்கள் வருவது வழக்கம்.
அந்த வகையில் அங்கு வரும் பெண்களிடம் முதலில் நட்பாகப் பேச ஆரம்பிக்கும் சத்யா, பின்னர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அந்த பெண்களும் இவர் மிகவும் நல்லவர் என நம்பியுள்ளார்கள். பின்னர் அந்த பெண்களிடம் தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இவ்வாறு அங்கு வரும் பல பெண்களிடம் இதுபோன்று பேசி பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் அவர்களிடம் கூறிய வட்டி தொகையினை சரியான நேரத்திற்குக் கொடுத்துள்ளார். இது அந்த பெண்களிடம் மேலும் நம்பிக்கையைக் கொடுக்க, பலரும் அதுபோல பணம் மற்றும் நகையினை சத்யாவிடம் கொடுத்துள்ளார்கள். அப்போது தான் சத்யா தனது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல வட்டி பணத்தை உரியவர்களிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதையடுத்து பணத்தைக் கொடுத்த பெண்கள் அதுகுறித்து கேட்க, சரியாகப் பதில் சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களை மிரட்டி, உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனத் திமிராகக் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவைக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சத்யா 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து சத்யாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து சத்யாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்