'அமைதியா இருந்தா சீண்டி பாக்குறது?'...'இளைஞர்கள் செஞ்ச பாதக செயல் '... வண்டலூர் பூங்காவில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. 602 ஹெக்டேர்(1490 ஏக்கர்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த விலங்கியல் பூங்காவில் சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். எப்போதும் மக்கள் கூடத்தில் காணப்படும் இந்த பூங்காவில் இளைஞர்கள் சிலர் வெள்ளை புலியை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 இளைஞர்கள் சேர்த்து அந்த புலியை கல்லால் தாக்கியுள்ளார்கள். பீமா என்ற 6 வயது வெள்ளை புலி தான் தாக்குதலுக்கு உள்ளானது.
இளைஞர்கள் விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 பேர் சேர்ந்து இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இளைஞர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பார்வையாளர்கள், உடனடியாக பூங்கா வனச்சரகர் கோபக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார்கள். இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்த அவர், சம்பந்தப்பட்ட புலியை தத்தெடுக்கும் வகையில் 6 பேரிடமும் தலா 500 ரூபாயை வசூலித்துவிட்டு, எச்சரித்து அனுப்பினார். ஆனால் அந்த இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே அங்கிருந்த பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது.