'தார் சாலையில் தண்ணீர் தெளித்த போது...' 'ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதால் அதிர்ச்சி...' 'அச்சத்தில் உறைந்த மக்கள்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தார்சாலையில் தண்ணீர் தெளித்த பொழுது சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட எ.புதுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தெருக்களில் சமீபத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதி கிராமம் என்பதால் பெண்கள் அதிகாலை வேலையில் தண்ணீர் அல்லது சாணம் தெளிப்பது வழக்கம்.
புதிதாக அமைக்கப்பட்ட சாலை கிராம மக்களின் வீட்டு வாசல் வரை இருந்ததால் பெண்கள் சாலைகளில் தண்ணீர் தெளித்துள்ளனர். அப்போது சில நொடிகளிலேயே இரத்தம் வடிவதைப் போன்ற சிவப்பு நிறத்தில் திரவம் வழிந்தோடுவதைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, கிராமத்தினர் அனைவரும் அங்கு கூடினர். இதனால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கூட்டம் கூடிய தகவலறிந்த பெரியகுளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தைக் கலைத்தனர்.
பின்னர் அப்பகுதியை ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தம் போன்ற சிவப்பு நிறத் திரவம் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.