‘கொரோனா தொற்று உறுதி செய்தும்’... ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும்’... ‘பச்சை மண்டலமாகவே இருப்பதற்கு என்ன காரணம்?!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தும், அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் வராமல் பச்சை மண்டலத்திலேயே இருப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இந்த முதியவர் அண்மையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது.
மேலும் இவருடன் சென்ற 8 பேர் மற்றும், அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் மண்டலமாக மாறும் என கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கொரோனா குறித்த நிலவரங்களை தமிழக அரசு வெளியிட்டபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிப்பு குறித்த விவரத்தில் பூஜ்யம் என்றே இருந்தது. அது போல் கொரோனா வரைப்படத்திலும் கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவே இருந்தது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ‘கிருஷ்ணகிரியை சேர்ந்த அந்த முதியவர் ஆந்திராவிலிருந்து வந்தார். அவருக்கு சேலம் சோதனை சாவடியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேரடியாக அவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது பட்டியல் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுவிட்டது’ என விளக்கம் அளித்தார். இதனால் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாமல் பச்சை மண்டலமாகவே திகழும் ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.