முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி திட்டம்!.. மினி கிளினிக் என்றால் என்ன? செயல்படும் நேரம் என்ன? அமைப்பு எப்படி இருக்கும்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் மருத்துவத்துறையில் புதிய திட்டமாக அம்மா மினி கிளினிக் திட்டம் நேற்று (14.12.2020) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி திட்டம்!.. மினி கிளினிக் என்றால் என்ன? செயல்படும் நேரம் என்ன? அமைப்பு எப்படி இருக்கும்?

இந்நிலையில், அதென்ன மினி கிளினிக்? செயல்படும் நேரம் என்ன? அமைப்பு எப்படி இருக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியமாகிறது.

1. கிளினிக் என்றால் என்ன?

   கிளினிக் என்பதற்கு, ஒரே ஒரு மருத்துவரின் தலைமையில் நடைபெறும் மருத்துவமனை என்று எளிதாகப் பொருள் புரிந்து கொள்ளலாம். இங்கு உதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட செவிலியர்களும், பணியாளர்களும் இருப்பர்.

2. மினி கிளினிக் என்றால் என்ன?

   அரசு உருவாக்கியிருக்கும் இந்த மினி கிளினிக்குகளும் அப்படியானதே. ஆனால், இங்கு படுக்கை வசதிகள் இருக்காது. ஆலோசனைக்கும், சிறு சிறு நோய்களுக்கான மருத்துவமும் கிடைக்கும்.

குறிப்பாக கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தவே இந்த மினிகிளினிக்குகள் தொடங்கும் முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

3. மினி கிளினிக் செயல்படும் நேரம்?

    காலை 4 மணி நேரமும், மாலை 3 மணி நேரமும் என மினி கிளினிக்குகள் இயங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த மினி கிளினிக் இயங்கும்.

4. மினி கிளினிக் அமைப்பு எப்படி?

    ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ், ஒரு பணியாளர் என மூன்று பேர் இருப்பர். மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இங்கு கிடைக்கும். மருத்துவ சிகிச்சைக்கு மக்கள் பரிந்துரைக்கப்படுவர். அந்தப் பரிந்துரையின் பேரில் அவர்கள் மேலதிக சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லலாம்.

5. என்னென்ன பிரச்சினைகளுக்கு அணுகலாம்?

    தலைவலி காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி உள்ளிட்ட சிறு சிறு பிரச்சினைகளுக்கு நேரடியாக இந்த கிளினிக்குகளை அணுகலாம்.

இத்திட்டத்தை, சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த மினி கிளினிக்குகளை நேற்று தொடங்கி வைத்தார். இப்போதைக்கு சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது.

அதிலும் முதல்கட்டமாக 47 இடங்களில் கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் 20 இடங்களில் இன்றே அவை செயல்படவும் ஆரம்பிக்கின்றன. இன்னும், 10 நாட்களில், மாநிலம் முழுதும், 2,000 மினி கிளினிக்குகள் செயல்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலேயே இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதனால், சளி, காய்ச்சல், உடல் வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. மேலும், இ.சி.ஜி., பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் போன்ற மருத்துவ உபகரணங்களும் இருக்கும்.

வரும் 16-ந்தேதி அதாவது நாளை சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்வர் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும், இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

 

மற்ற செய்திகள்