ஜல்லிக்கட்டு: மதுரையின் அடையாளமாக திகழும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், காளைகள் சீறி பாய்கின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான இன்று நடக்கிறது.
150 பார்வையாளர்கள்
பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்கிறது. கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதுவரை இல்லாத முறையாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு ஆன்லைனில் நடந்தது. அதன்படி 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 544 காளைகளும், 2001 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
கொரோனா பரிசோதனை
போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்படுவர. போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதி சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
காளை வெளியேறக்கூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பி விடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது. அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து, 1,300 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முயன்று வருகின்றனர். இந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
பரிசுகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறப்பு பரிசாக சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படுகிறது. சிறந்த மாடுபிடி வீரருக்கு டூவீலர் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மதிக்கத் தக்க அளவில் இப்போட்டியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
மற்ற செய்திகள்