'விறுவிறுவென முன்சென்று.. ஆம்புலன்ஸ் வந்ததும் 4 ஸ்டெப் பின்னால் போய் வழிவிடும் அழகர்’.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கள்ளழகர் ஊர்வலத்தின்போது, அத்தனை நெருக்கடியான கூட்டத்தின் நடுவிலும் ஆம்புலன்ஸுக்கு கள்ளழகர் பல்லக்கை ஒதுக்கிக் கொடுத்து வழிவிட்டுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
சாலைகளில் செல்லும்போது பெரும்பாலான சாமி ஊர்வலங்களின்போது, பேருந்து முதலான வாகனங்கள், ஊர்வலம் முடியும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மதுரை சித்திரைத் திருவிழாவையடுத்து, கள்ளழகர் தேரோட்டத்துக்கு முன்னர் கள்ளழகர் மதுரை புறப்பாடு ஊர்வலம் நிகழ்ந்தது.
இதில் கள்ளழகர் குதிரையில் பவனி வரும் பல்லக்கை பக்தர்கள் சுமந்துகொண்டு செல்ல, ஆர்ப்பரிக்கும் கூட்டத்தினர் நெருக்கிப்பிடித்தும் இறுக்கிப்பிடித்தும் ஊர்வலத்தில் நகர்ந்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த பெரிய வேன் ஆம்புலன்ஸின் சத்தம் கேட்டதும், உடனடியாக அங்கிருந்த கூட்டத்தினர் விலகி, ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டதோடு, கள்ளழகரின் பல்லக்கும் திரும்பி நின்று ஆம்புலன்ஸைப் பார்த்தபடி, வழிவிட்டுள்ளார்.
எல்லா உயிர்களையும் கடவுள் ரட்சிப்பதாய் நம்புவதே உண்மையான ஆன்மீகம் என நம்பும் பக்தர்கள் பலரும் இந்த அரிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளனர். பொதுவாக சித்திரைத் திருவிழா தேரோட்டம் முடிந்த பின்னரே கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவது வழக்கமாக இருந்த நிலையில், இந்த வருடம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருக்கல்யாண நாளன்றே கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Lord Kallazhagar gives way to an ambulance in Madurai. pic.twitter.com/FIHYluie6W
— Vijay Kumar S (@vijaythehindu) April 25, 2019