VIDEO : "நான் குடிச்சதே இல்ல Sir!".. போலீஸிடம் வாதம் .. வைரல் வீடியோவின் பின்னணி என்ன? இளைஞர் EXCLUSIVE பேட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் சென்னையில் ஒரு இளைஞரை பிடித்த பேட்ரோல் போலீசார் அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாக மது பரிசோதனை கருவி காட்டுவதாக சொல்ல அவரும், “நான் குடிக்கவே இல்லை. உங்கள் மிஷின் தவறாக இயங்குகிறது” என்று வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வந்தது.
இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட இளைஞர் இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் வீடியோ தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கிறார். இது தொடர்பான பேட்டியில் பேசிய இளைஞர் தீபக், “நான் தீபக். சாலிகிராமத்தில் வசிக்கிறேன். என்னுடைய அம்மா, லஸ் சர்ச் ரோட்டில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சில பொருட்களை எடுத்து வரச் சொல்லி அனுப்பி இருந்தார். நான் என்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் சென்று அவற்றை எடுத்துக்கொண்டு இரவில் எல்டாம்ஸ் ரோடு வழியே லஸ் சர்ச் சாலையை கனெக்ட் செய்யும் இணை சாலையில் வந்து கொண்டிருந்தேன்.
அப்போது என்னை பிடித்த போலீசார் மது அருந்தி விட்டேனா என்று பரிசோதனை செய்யும் கருவிக்கொண்டு சோதனை செய்தனர். நானும் சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த கருவியில் 45 சதவீதம் நான் மது அருந்தியதாக காண்பித்தது. அதன் பிறகு அவர்கள் என்னை வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லி நான் மது அருந்தியதாக கையெழுத்திட்டு வண்டியை விட்டுவிட்டு போகச்சொல்லி வாதம் செய்தனர்.
நானோ இதுவரையில் மது அருந்தியதே இல்லை, நான் ஒரு டீடோட்டலர் எனும்போது, நான் கையெழுத்து போட்டு வாகனத்தை விட்டு விட்டுவிட்டு இந்த பிரச்சனையை பிறகு பார்த்துக்கலாம் என்று சென்றுவிட்டால் கூட நான் மது அருந்தினேன் என்று நான் ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். அவர்களும் நான் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் நான் அவர்களது மெஷின் தவறாக காண்பிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தேன், வாதம் செய்தே. ஒருவேளை நான் மது அருந்ததிதாக நீங்கள் சொல்வது உண்மையானால் என்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், இப்போதே ரத்த பரிசோதனை செய்து நிரூபியுங்கள் என்று கூறினேன்.
அவர்களோ, ‘உங்கள் மீதுதான் மது அருந்தியதாக புகார் இருக்கிறது என்பதால் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும், உங்களை அழைத்துக்கொண்டு நாங்கள் மருத்துவமனைக்கு அலைய முடியாது’ என்றனர். அப்போது அங்கிருந்து என்னுடைய அட்வகேட்டுக்கு போன் செய்தேன், அவரோ நான் எந்த தவறும் செய்யவில்லை எனும் பட்சத்தில் நிச்சயமாக போலீசார் கூறுவது போல கையெழுத்து போட்டு விட்டு வாகனத்தை விட்டு விட்டு செல்ல வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். மேலும் வேறு மெஷினில் பரிசோதனை செய்ய சொல்லி கேட்க சொன்னார். அதன் பிறகும் நான் கூறும் வாதங்களை அல்லது குறிப்பிடும் தகவல்களை போலீசார் ஏற்கவில்லை. நானோ இங்கு இல்லை, நான் எங்கு மது அருந்தினேன் என்று நிரூபிக்கப்பட்டாலும், இன்று இல்லை, நான் ஏதாவது ஒருநாளில் மது அருந்தினேன் என்று நிரூபிக்கப்பட்டாலும், நான் கையெழுத்து போட்டுவிட்டு வாகனத்தை விட்டு விட்டு செல்கிறேன் அல்லது உங்களுடன் ஸ்டேஷன் வருகிறேன் என்று குறிப்பிட்டேன்.
மேலும் உங்கள் உயரதிகாரிகளை வரசொல்லுங்கள். அவர்களிடமும் நான் இதையே சொல்கிறேன் என்றேன். இப்படி நீண்ட பெரும் வாதத்திற்கு பிறகு இன்னொரு மெஷின் கொண்டுவரப்பட்டது. அதில் நான் மது அருந்தவில்லை என்பது உறுதியானது. மீண்டும் பரிசோதனை செய்தனர். ஆனாலும் நான் மது அருந்தவில்லை என வந்தது. இறுதியாக என்னை போகச் சொல்லிவிட்டார்கள். அவ்வளவு நேரம் வாதம் செய்தவர்கள், புது மெஷின் சோதனையில் நான் மது அருந்தவில்லை என்று உறுதி செய்தவுடன் என்னை போக சொல்லிவிட்டனர். இல்லையென்றால் நான் ஸ்டேஷனில்தான் இருக்க வேண்டும். அவர்கள் சட்டம் ஒழுங்கு துறையை சேர்ந்தவர்கள். நான் அவர்களிடம் எதிர்வாதம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. ஆனால் நான் சமூகத்தில் டீடோட்டலர் என பெயர் வாங்கி வைத்திருக்கிறேன். நான் மது அருந்தியதே இல்லை. எனவே நான் முயற்சி செய்தது நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மட்டுமே. அதை செய்யும்போது என் சகோதரர் எடுத்த வீடியோவைதான், இதுபோன்ற சூழலில், நாம் மது அருந்தவில்லை எனும் பட்சத்தில், சில சமயம் மெஷின் மீதும் தவறு இருக்கலாம் எனும் விழிப்புணர்வுக்காக வெளியிட்டேன். இதுதான் நடந்தது” என்றார்.
மற்ற செய்திகள்