"எங்க ஊருக்கு பஸ் வசதி வேணும்!"... "கிராமசபையை அதிரவைத்த 5ம் வகுப்பு சிறுமி!"... "பரிசளித்து பாராட்டிய எம்.பி"... "மக்கள் கொண்டாட்டம்"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிராம சபை கூட்டத்தில் மாணவியின் கேள்வியால், பேருந்து வசதி கிடைக்கவிருக்கும் சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை அருகே மீனாட்சிபுரம் ஊராட்சியில், நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சஹானா என்ற 5ம் வகுப்பு படிக்கும் மாணவி பங்கேற்றுப் பேசியுள்ளார். அப்போது, தங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளதாகவும், உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால், பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர் கிராம சபையில் முன்வைத்த கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அந்த காணொளி மதுரை பாராளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசனின் பார்வைக்குச் சென்றது. இந்நிலையில், சிறுமி சஹானாவின் கோரிக்கையை அங்கீகரிக்கும் வகையில், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், மதுரை எம்.பி. தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது, அந்த சிறுமியின் பகுதிக்கு பள்ளி நேரங்களில் பேருந்து வசதி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் தகவலைத் தெரிவிப்பதற்காக, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மீனாட்சிபுரத்தில் உள்ள சிறுமி சஹானா படிக்கும் பள்ளிக்கு வந்தார். அங்கு மாணவி சஹானாவைச் சந்தித்தவர், சிறப்பாக பேசிய சஹானாவுக்கு பரிசு ஒன்றையும் அளித்தார்.
அந்தப் பரிசை பெறும்போது, சிறுமி ஆனந்தக்கண்ணீர் விட்டது, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.