‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் சேதுபதி நடித்த மண்டி ஆன்லைன் செயலி விளம்பரத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மண்டி நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில், ஆன்லைன் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை அடுத்து, வணிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆன்லைன் வியாபாரத்தால், வணிகர்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், மண்டி ஆன்லைன் செயலியின் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘விவசாயிகள் மற்றும் வணிகர்களின் நலனையும், அக்கறையையும் மனதில் வைத்து, புதுவிதமாக நாங்கள் உருவாக்கிய, மண்டி ஆன்லைன் செயலியை கொண்டுசெல்ல, நம்பகத்தன்மையான விஜய் சேதுபதியை அணுகினோம். அவர், விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும், உண்மையில் மண்டி செயலி, பலனளிக்கும் என்று உறுதியாக நம்பியப்பிறகுதான், இந்த விளம்பரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
மேலும் மண்டி செயலி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. பிரபலங்களின் புகழுக்கு, தவறான புரிதல்கள்மூலம் களங்கம் விளைவிப்பது நியாயமற்றது. மண்டி செயலியினால், விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வருமான வாய்ப்பு அதிகரிக்கும் பொருட்டே, இந்த விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை புரிந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.