Darbar USA

கணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உறவுகள் யாருமின்றி தனியாக வசித்து வரும் மூதாட்டி ஒருவர், கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி!

வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி ( 70). இவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு மஞ்சள் நிற பையுடன் தள்ளாடியபடியே வந்தார். அப்போது அவர் பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் தான் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரூ.12 ஆயிரத்தை மாற்ற முடியவில்லை என கண்ணீருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார். மூதாட்டியின் சிரமத்தை உணர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர், அதுதொடர்பாக விசாரிக்கும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

மூதாட்டியிடம் விசாரித்தபோது, `எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். குழந்தைகளும் எனக்கு இல்லை.  எனக்கென்று யாருமில்லை. வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுக சிறுக 12,000  ரூபாய் பணம் சேர்த்து தலையணைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். அதுமட்டுமன்றி, காசநோயால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்போதெல்லாம் வேலைக்குச் செல்ல முடியவில்லை.  எனக்கு எழுத படிக்க தெரியாது.

வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டதால்,  சேர்த்து வைத்த பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர் இது செல்லாத நோட்டு என்று கூறினார். எனக்கு எழுத படிக்க தெரியாது. மோடி அறிவித்த பணமதிப்பிழப்பும் எனக்குத் தெரியாது. வாடகை கொடுக்க கூட பணமில்ல. எப்படியாவது எனது பணத்தை மாத்திக்கொடுங்க’ என்று கண்ணீர் விட்டு கேட்டுள்ளார்.  இது தொடர்பாக வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்தார். அப்போது அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின்படி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்.

அதனால் மூதாட்டி பரிதவிப்புக்கு உள்ளானார். பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர், மூதாட்டியிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து புவனேஸ்வரி அங்கிருந்து சோகத்துடன் வீட்டிற்கு சென்றார். பரபரப்பாக இந்த சம்பவம் பேசப்பட்டு வந்ததற்கிடையில், வேலூர் திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், மூதாட்டியை வரவழைத்து, பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

WOMAN, VELLORE, BLACK, MONEY, DEMONITIZATION