காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகள்.. "போட்டி போட்டு எடுத்துட்டு போயிருக்காங்க?".. போலீஸ் விசாரிச்சதும் தெரிஞ்ச அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரை அடுத்த கொணவட்டம், சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கார் ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து, அதில் இருந்து இறங்கிய சிலர், சாலை ஓரத்தில் கட்டு கட்டாக பல 500 ரூபாய் நோட்டுகளை கொட்டி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவர்கள் கொட்டிய ரூபாய் நோட்டுகள், சாலை மற்றும் சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் பறக்க ஆரம்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
நெடுஞ்சாலைப் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கே சிதறி கடந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்ததுடன் அங்கு நின்ற பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த நோட்டுகள் அனைத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அங்கே வைத்து எண்ணி பார்த்துள்ளனர். அப்போது, அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டின் உண்மைத் தன்மை பற்றி போலீசார் சோதனை செய்த போது தான், அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது.
சாலை ஓரத்தில் கிடந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என்பது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை குறித்தும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றன. நெடுஞ்சாலை பகுதியில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதே வேளையில் காற்றில் பறந்த சில ரூபாய் நோட்டுகளை போலீஸ் வருவதற்குள் பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கூட 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது கவனத்துடன் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வேலூரில் பள்ளிகொண்டா என்னும் பகுதியில் காரில் இருந்து லாரிக்கு பணத்தை மாற்றிய போது சுமார் 14 கோடி ரூபாய் போலீசாரிடம் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்