'38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெஸ்டர்ன் நாடுகளில் நடப்பது போன்ற ‘தேர்தல் நைய்யாண்டி’ விநோதங்கள் நம்மூரிலும் வேலூர் வேட்பு மனுத்தாக்கலில் நடந்தேறியுள்ள சம்பவங்கள் வைரலாகி வருகின்றன.

'38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ?!

நடந்து முடிந்த 17வது மக்களவைத் தொகுதியில், தமிழகத்தில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு தற்போது மீண்டும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாளான வியாழன் அன்று (ஜூலை 11, 2019) 8 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களுள் ஏ.சி. சண்முகத்தைத் தவிர மற்றைய அனைவரும் வித்தியாசமாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்திருந்தது வைரலாகியுள்ளது. அப்போது திகில் படங்களில் ஆவிகள் அணிவது போலான உடையில் ஒருவர் பின்னோக்கி வேகமாக நடந்து வந்தார்.

விசாரித்ததில், அவர் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 38 ஆண்டுகளாக பின்னோக்கி நடப்பதாகவும், உலக அமைதிக்காக 16 ஆண்டுகள் பேசாமல் இருந்ததாகவும், தன் பெயர் மனிதன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தனக்கு வயது 2 லட்சத்துக்கு மேல் என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.

இதேபோல் மேட்டூர் பகுதியில் இருந்து வந்த,  பத்மராஜன் என்கிற, முறுக்கு மீசைக் காரர் ஒருவர், 32 ஆண்டுகளாக, தான் தேர்தல் அரசியலை  சந்திப்பதாகவும்,  தன்னை எல்லாரும் தேர்தல் மன்னன் என்றுதான் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அகிம்சா சோஸியலிஸ்ட் கட்சியில் இருந்து வந்த ரமேஷ் தமிழில்தான் வேட்பு மனுத்தாக்கல் செய்வேன் என்று அடம் பிடித்ததால் தேர்தல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.