"Love-க்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல".. நாடுகளைக் கடந்த காதல்.. தென் கொரிய காதலியை கரம் பிடித்த தமிழக வாலிபர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென் கொரிய காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ்நாட்டு வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ள நிகழ்வு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பொதுவாக, இருவருக்கு இடையே உருவாகும் காதல் என்பது மதம், இனம், மொழி, நாடு, நிறம், வயது என எதையுமே ஒரு தடையாக பார்க்காது.
இவை அனைத்தையும் கடந்து உருவாகும் உன்னதமான காதல், நிச்சயம் பல்வேறு முயற்சிகளைக் கடந்து கைகூட தான் வழி செய்யும்.
அந்த வகையில் தான், கடல், மலை என அனைத்தையும் கடந்து கடைசியில் சேர்ந்தும் காட்டி காதலில் வென்றுள்ளது இந்த ஜோடி. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக் குட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் - செல்வராணி ஆகியோரின் மகன் பிரவீன் குமார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற பிரவீன், மேற்படிப்புக்காக தென் கொரியா சென்று படித்து முடித்த பின், அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், பிரவீன் குமாருக்கு பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் என்ற பெண் மீது காதல் உருவாகி உள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கடல் கடந்த தங்களின் காதலை பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வைத்து பிரவீன் குமார் - சேங்வான்முன் திருமணம் படு ஜோராக நடைபெற்றது.
காதலிக்கு தாலி கட்டி பிரவீன் குமார் திருமணம் செய்து கொண்ட நிலையில், அம்மி மிதித்தல், மெட்டி போடுதல் என தமிழக கலாச்சார முறைப்படி சடங்குகளும் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, சேங்வான்முன் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாணியம்பாடி வந்தடைந்தனர்.
அதே போல, ஏராளமான குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரவீன் குமார் - சேங்வான்முன் திருமண புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்