‘கூகுள் மேப் பொய் சொல்லாது’.. சந்துபொந்தெல்லாம் புகுந்துபோன வேன் டிரைவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று மலைச்சரிவில் சிக்கி வேன் டிரைவர் விடிவிடிய தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கூகுள் மேப் பொய் சொல்லாது’.. சந்துபொந்தெல்லாம் புகுந்துபோன வேன் டிரைவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வேன் மூலம் சுற்றுலா பயணிகள் சிலர் ஊட்டிக்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை இரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் விட்டுவிட்டு வேன் டிரைவர் உணவருந்த நகருக்குள் சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு கூகுள் மேப் உதவியுடன் ஜி.பி.எஸ்ஸைப் பயன்படுத்தி வேனை இயக்கியுள்ளார்.

மேப் காண்பித்த பாதைகளில் வேனை ஓட்டிச் சென்றுகொண்டே இருந்துள்ளார். ஆனால் திடீரென பாதை செங்குத்தாகவும், குறுகியதாகவும் இருந்துள்ளது. தொடர்ந்து மேப் காட்டிய வழியில் வேனை இயக்கிய ஓட்டுநருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அப்போது மலைச்சரிவான பாதையில் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாதவாறு வரிசையாக இரும்பு தூண்கள் நடப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பாதை செங்குத்தாக இருந்ததால் அவரால் வேனை பின்னே இயக்க முடியவில்லை. நீண்ட நேரமாக முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனாலும் வேனை இயக்க முடியாததால், வாகனத்துக்குள்ளேயே இரவு முழுவதும் படுத்துத் தூங்கியுள்ளார். காலையில் இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கிரேன் உதவியுடன் கயிறு கட்டி வாகனத்தை மீட்டுள்ளனர். கூகுள் மேப்பைப் பார்த்து சென்ற வேன் ஓட்டுநர் மலைச்சரிவில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

GOOGLE, OOTY, GOOGLEMAP