'கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டோமே'... 'கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா'... 'கதறிய பெற்றோர்'... விபரீதத்தில் முடிந்த இளம் ஜோடியின் காதல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பொறுமை என்பது துளியும் இல்லையோ என, சிந்திக்க வைக்கும் அளவுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தும், இளம் ஜோடி செய்த விபரீதம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டோமே'... 'கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா'... 'கதறிய பெற்றோர்'... விபரீதத்தில் முடிந்த இளம் ஜோடியின் காதல்!

தர்மபுரி மாவட்டம் அரூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். 22 வயதான இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோபியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் உறவினர்கள் என்பதால் பெற்றோர்களும் இருவரின் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார்கள். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், ஊரடங்கு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கலாம் எனப் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் காதல் ஜோடி இருவரும் ஆலயத்துக்குச் சென்று வருகிறோம் எனக் கூறிவிட்டு, வெளியில் சென்றுள்ளார்கள். ஆனால் வெகுநேரம் ஆன பின்பும் இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப் போன பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இதனிடையே நேற்று காலை அரூர் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள தண்டகுப்பம் காப்புக்காடு வனப்பகுதியில் இருவரது சடலம் கிடப்பதாக அந்த வழியாகச் சென்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து பதறிப்போன இருவரது பெற்றோரும், அங்குச் சென்று பார்த்துள்ளார்கள். அங்கு விஷபாட்டில் அருகில் கிடக்க, காதல் ஜோடி, ஆனந்தராஜ் மற்றும் சோபியா இருவரும் பிணமாகக் கிடந்தார்கள். அவர்களது உடல்களைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள்.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊரடங்கு காரணமாகத் திருமணத்தைப் பெற்றோர் தள்ளி வைத்ததால் விரக்தி அடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது போலீசார் மட்டுமல்லாது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

மற்ற செய்திகள்