'நான் வேண்டாம்னுதான் சொன்னேன்.. எல்லாத்துக்கும் காரணம் அப்பாதான்'.. நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய உதித் சூர்யா வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் பெற்ற உதித் சூர்யாவை கைது செய்வதற்காக, கடந்த வாரம் தனிப்படை போலீஸார் சென்னை விரைந்தனர். ஆனால் உதித் சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானதை அடுத்து, திருப்பதி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட உதித் சூர்யாவிடமும், அவரது குடும்பத்தினருடனும் எஸ்.பி விஜயகுமார், டிஸ்பி ஹாட்வின் ஜெகதீஸ்குமார், ஆய்வாளர் சித்ராதேவி உள்ளிட்டோர் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேசனும் உண்மையை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் விகடன் இதழுக்கு தகவல் அளித்துள்ளார்.
தேனி விஏஓ குமரேசன் முன்னிலையில், தந்தை, மகன் இருவரும் தனித்தனியே கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன்படி, ‘நான் வேண்டாம்னுதான் சொன்னேன்.. ஆனா அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்’ என்று உதித் சூர்யாவும், ‘என் மகன் டாக்ராகனும்னு ஆசப்பட்டு இப்படி செஞ்சுட்டேன்’ என்று அவரது தந்தை வெங்கடேசனும் கூறியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்துவார்கள் என்றும், அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் தந்தையும் மகனும் அடைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே உதித் சூர்யாவின் தாயார் கயல்விழிக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிகிறது. ஆனாலும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
தவிர, நீட் தேர்வு பயிற்சி மையத்தின் இடைத்தரகருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதை அடுத்து போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.