"வாரிசு அரசியல்னு சொல்லுவாங்க.. ஆனா..".. அமைச்சர் உதயநிதி பரபரப்பு விளக்கம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வாரிசு அரசியல் குறித்து விமர்சனங்கள் எழுவது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

"வாரிசு அரசியல்னு சொல்லுவாங்க.. ஆனா..".. அமைச்சர் உதயநிதி பரபரப்பு விளக்கம்..

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார். இதனிடையே, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழா முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,"விமர்சனங்கள், வரும், வாரிசு அரசியல் என்று சொல்வார்கள். அது எனக்கு புதுசு இல்லை. அதை தடுக்கவும் முடியாது. அவற்றை என் செயல்கள் மூலம் மாற்றுவேன். விமர்சனங்கள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள். முன்வையுங்கள். மாற்றிக்கொள்ள பார்க்கிறோம்" எனக் கூறினார்.

இதனிடையே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

UDHAYANIDHI, MK STALIN, MINISTER

மற்ற செய்திகள்