தி.மு.க.வைப் பார்த்து கமல் ஏன் எரிச்சலாகிறார்?.. போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க.வைப் பார்த்து ஏன் எரிச்சலடைகிறார் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் என்பதை விட, தாத்தா கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளம்தான், மக்களின் மனதில் பதிந்துள்ளது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 வருடங்களாக தி.மு.க. வின் அரசியல் களத்தில் தாம் அங்கம் வகித்து வருவதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரச்சாரம் மட்டும் செய்யாமல், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். தாத்தா கலைஞர் அவர்களுக்காக துறைமுகம் பகுதியிலும், அப்பா ஸ்டாலின் அவர்களுக்காக ஆயிரம் விளக்கு பகுதியிலும் சென்று வாக்கு சேகரித்துள்ளதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர்களுடனேயே தற்போது கூட்டணி வைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 28 தமிழக அமைச்சர்கள் மீது 200 பக்க ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்த பா.ம.க., தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டார்களா? என்று தெரியவில்லை என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து பயப்படுவதாக தெரிவித்துள்ள அவர், தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் தேர்தலை அறிக்கையைக் கண்டு பா.ஜ.க. அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், வாரிசு அரசியல், எதிரணிக் கட்சிகளின் விமர்சனம் உள்ளிட்டவைகளைப் பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியை இங்கே காணலாம்...