"என் அண்ணன், 10 நாளுக்கு ஒருமுறை போன் பேசுவார்".. மயில்சாமி மறைவு.. வேதனையில் உதயநிதி
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
Images are subject to © copyright to their respective owners
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் மயில்சாமி சென்னை கேளம்பாக்கத்தில் நேற்றிரவு சிவராத்திரி நிகழ்ச்சியில கலந்துகொண்டதை டிரம்ஸ் சிவமணி உறுதிப்படுத்தியுள்ளார். மயில்சாமி மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தொடர்ந்து, அவரது உடலுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்த நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பின்னர் பேசுகையில், "மயில்சாமி அண்ணன் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சியை தருகிறது. திரையுலகம் மட்டுமல்லாமல் அத்தனை பேருக்கும் இது மிகப்பெரிய இழப்பு. நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி மிகவும் நல்ல மனிதர் அவர். அவருடன் நிறைய பேசி உள்ளேன். அனைவருடனும் பாசமாக பழகுவார். குடும்பத்தில் ஒரு மனிதர் மாதிரி தான் பேசுவார்.
Images are subject to © copyright to their respective owners
10 நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் அண்ணன் அழைப்பார். ஒருமுறை கூட சொந்த விஷயத்திற்கு உதவி கேட்டதில்லை. பொதுநலன் சார்ந்து என்னுடன் நிறைய விஷயங்களை பேசுவார். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் இழப்பு, அதிகம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட படங்களில் என்னுடன் நடித்தார்.
50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 40 நாட்கள் என்னுடன் தான் அண்ணன் இருந்தார். எனக்கு ஒரு அண்ணன் மாதிரி தான். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கல்" என உருக்கமாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்