ஓடவும் முடியாது...! ஒளியவும் முடியாது...! 'ஒண்ணுக்கே பாடி தாங்காது, இதுல ரெண்டு வருதாம்ல...' புதுசு புதுசா 'புயல' ரிலீஸ் பண்ணுதே கடலு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நவம்பர் 30-ஆம் தேதியும், அரபிக்கடலில் டிசம்பர் 01-ம் தேதியுமாக இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அடுத்தடுத்த நாளில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (30-11-2021) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், 'குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (29-11-2021) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும். வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
நவம்பர் 30 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர்-1 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சூறாவளி காற்று வீசும் என்பதால் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்