'குடிநீருக்காக தோண்டிய பள்ளம்'... 'விளையாடும்போது தவறி விழுந்து'... 'இரண்டரை வயது குழந்தைக்கு'... ‘வீட்டருகே நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம் அருகே குடிநீர் பைப் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக, தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ளது பனையூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், முத்து - தமிழரசி தம்பதியினர். இந்நிலையில் இவர்களது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை, நீண்ட நேரமாகியும் காணாததால், பதறிப்போயினர். பின்னர், அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் குழந்தையை தேடிப் பார்த்தனர். அப்போது இவர்களது வீட்டருகே, குடிதண்ணீர் பைப்பில் வரும் நீரை பிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மழைநீர் தேங்கியுள்ளது.
அந்தப் பள்ளத்தில் குழந்தை விழுந்து நீரில் மூழ்கியிருந்ததை பார்த்து, பெற்றோர் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பனையூர் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், இவ்வாறு அங்குள்ளவர்கள், மூன்றிலிருந்து ஐந்து அடி வரை, இப்படி ஆபத்தான முறையில் பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.