'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆசிரியரைக் காரை ஏற்றிக் கொல்ல முயன்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சின்னதுமாக்குன்றில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மற்றும் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் ஆகிய இருவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கோவிந்தராஜிடம் பழைய கார்களை வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் அதிகப் பணம் சம்பாதிக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்கள். இதனை உண்மை என நம்பிய கோவிந்தராஜ், தன்னுடைய சேமிப்பிலிருந்த ரூ.25 லட்சம் பணத்தை ஆனந்த கிருஷ்ணனிடம் வழங்கினார்.

சுளையாக 25 லட்சம் கையில் வந்ததால் குஷியிலிருந்த ஆனந்த கிருஷ்ணன், பழைய கார்களை வாங்கி, வாடகைக்கு விட்டுள்ளதாகக் கூறி, ஒரு மாதம் மட்டும் கோவிந்தராஜுக்குப் பணம் வழங்கினார். பணம் கொடுத்த ஒரு மாதத்திலேயே நல்ல வருமானம் வருகிறதே என கோவிந்தராஜ் மகிழ்ச்சியிலிருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அதற்கு அடுத்த மாதம் தான் ஆனந்த கிருஷ்ணனின் உண்மை முகம் கோவிந்தராஜுக்குப் புரிந்தது.

அந்த மாதம் வாடகை பணம் வராததால் பணத்தை கோவிந்தராஜ் கேட்டுள்ளார். ஆனால் ஆனந்த கிருஷ்ணன் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தைத் தர ஆனந்த கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்து, எட்டயபுரம் அருகே சிந்தலைக்கரை ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கோவிந்தராஜிடம் கூறினார்.

அப்போது தான் சரவண குமாரும், ஆனந்த கிருஷ்ணனும் திட்டம் ஒன்றைப் போட்டார்கள். பணத்தை வாங்க வரும் கோவிந்த ராஜை கார் ஏற்றிக் கொல்ல இருவரும் முடிவு செய்தார்கள். ஆனால் அது பார்ப்பதற்கு விபத்து போன்று இருக்க வேண்டும் என, இருவரும் திட்டமிட்டார்கள். இதையடுத்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக எட்டயபுரம் அருகே கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதினார். கார் மோதிய வேகத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகிருஷ்ணன், சரவணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆனந்தகிருஷ்ணனின் காரையும் பறிமுதல் செய்தனர். கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்க மனமில்லாமல், பணம் கொடுத்தவரையே கார் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்