'ரூ.150 கோடி மதிப்புள்ள... அரிய வகை ஜப்பான் 'இரிடியம்' உங்களுக்கு வேண்டுமா'!?.. மோசடி கும்பலின் பலே பிரச்சாரம்!.. போலீஸ் அதிரடி!.. பதறவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜப்பானுக்கு அனுப்ப இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் இருப்பதாகக் கூறி, பணம் பறிக்க முயன்ற மோசடிக் கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளது.

'ரூ.150 கோடி மதிப்புள்ள... அரிய வகை ஜப்பான் 'இரிடியம்' உங்களுக்கு வேண்டுமா'!?.. மோசடி கும்பலின் பலே பிரச்சாரம்!.. போலீஸ் அதிரடி!.. பதறவைக்கும் பின்னணி!

தூத்துக்குடி மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு, மோசடிக் கும்பல் ஒன்று காரில் சுற்றித் திரிவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதூர் பாண்டியாபுரத்தில் தனிப்படை போலீசார் இன்னோவா கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, அதில் அரிவாள்- கத்தி போன்ற ஆயுதங்களுடன் 6 குப்பிகளில் அடைக்கப்பட்ட ரசாயனக் கலவை பெட்டியைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், காரில் இருந்த இருவரும் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் வைத்தியலிங்கம் என்பது தெரியவந்தது. அந்த 6 குப்பிகளிலும், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

                          tuticorin iridium metal cheating money fraud police truth revealed

ஜப்பானின் ஜே.வி.சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.விடம் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இரிடியம் ஆர்டர் செய்திருந்ததாகவும், மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் அனுப்பியபோது, அதிலிருந்து 10 பெட்டிகள் மாயமானதாகவும், ஒவ்வொரு பெட்டியிலும் 6 இரிடியம் குப்பிகள் வைத்திருந்ததாகவும், மாயமான 10 பெட்டிகளில் 3 பெட்டிகள் ராமநாதபுரம் சாமிநாதனுக்கு கிடைத்ததாகவும் தாறுமாறாக கதை அளந்துள்ளனர்.

மேலும், கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு கடும் கிராக்கி இருப்பதால் அவற்றை விற்பதற்காக சாமிநாதன் தன்னிடம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் வைத்தியலிங்கம். தூத்துக்குடியைச் சேர்ந்த மரியதாஸ், முருகன் ஆகியோரை, தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வரவழைத்த முத்துராமலிங்கம், வைத்திலியங்கம் ஆகியோர் "ரேர் பீஸ்" தங்களிடம் இருப்பதாக கூறி செல்வந்தர்கள் இருந்தால் அழைத்து வரச் சொல்லியுள்ளனர்.

அப்படி வருபவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்புவதுதான் இந்த மோசடி கும்பலின் சதித் திட்டம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து போலீசார் இவர்களை சுற்றி வளைப்பதற்குள் லாட்ஜில் இருந்து தப்பியவர்களை வாகனச்சோதனையில் மடக்கி உள்ளனர் காவல்துறையினர். இதையடுத்து முத்துராமலிங்கம், வைத்தியலிங்கம், முருகன்,மரியதாஸ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இரிடியம் என்று மோசடிக்கும்பல் காட்டிய குப்பிகளில் இருப்பது என்ன என்பதைக் கண்டறிய அவற்றை சென்னைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபோன்று இந்த மோசடிக் கும்பல் எத்தனை பேரிடம் ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மும்பையில் இரிடியம் மாயமானதாகக் கூறுவதே பொய் என்றும், வேதியியல் ஆய்வுகளுக்கு உதவும் அரியவகை உலோகமான இரிடியம், ஒரு கிராம் பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

                        tuticorin iridium metal cheating money fraud police truth revealed

சர்வதேச அளவில் ஒரு கிராம் இரிடியம் மெட்டல் 99 அமெரிக்க டாலர்கள் அதாவது 7,296 ரூபாய் 25 பைசாவுக்கு அமேசான், இண்டியாமார்ட், அலிபாபா உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வணிகத் தளங்களில் விற்பனைக்கு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தங்கம், பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகம் தான் இரிடியம் என்றாலும், இதனை அறிவியல் ரீதியாக பயன்படுத்த தெரியாதவர்கள் கையில் வைத்துக் கொண்டு பலகோடி ரூபாய் பேரம் பேசுவது நகைப்புக்குரியது என்கின்றனர் தூத்துக்குடி போலீசார்.

இரிடியம், சிவப்பு பாதரஸம் உள்ளதாகவும், பல கோடி ரூபாய் விலை போகும் என்றும் யாராவது பொய் பேசி மோசடி செய்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்