‘4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி’.. ‘கடினமான பாறைகளால்’.. ‘தடைபட்ட துளையிடும் பணி வேகமெடுத்தது’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 4வது நாளாகத் தொடர்ந்து வருகின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைகிணறு ஒன்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை கடந்த 25ஆம் தேதி மாலை தவறி விழுந்தது. இதையடுத்து குழந்தையை மீட்கும் பணிகளில் தன்னார்வ அமைப்புகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கயிறு கட்டி மீட்கும் முயற்சி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் குழந்தையை மீட்கும் பணி நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இதற்காக குழி தோண்டும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கும் அதிகமான ஆழத்திற்குச் சென்றுள்ளது. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே குழி தோண்டப்படும் பகுதியில் கடினமான பாறைகள் இருந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. ரிக் இயந்திரம் மூலம் போடப்படும் துளை வழியாக உள்ளே சென்று குழந்தையை மீட்க தீயணைப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்கப்பட்ட உடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் ரிக் இயந்திரம் பழுதாக, அதிக திறன் கொண்ட 2வது ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இடையே கடினமான பாறைகளால் குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தற்போது கூடுதல் பாறைகள் தகர்க்கப்பட்டதால் மீட்புப் பணி வேகமெடுத்துள்ளது. சென்னையிலிருந்து கடினமான பாறைகளை வெட்டும் புதிய டிரில் பிட் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் நாளில் இருந்தே அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து மீட்புப்பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மீட்புப் பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், குழந்தையை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருவதாக குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அத்தோடு கரூர் எம்.பி ஜோதிமணி, தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.