‘40 வருசத்துக்கு அப்பறம்தான் இது பூக்கும்’.. ஒரு கிலோ 1000 ரூபாய், ‘மருத்துவக்குணம்’ வேற இருக்காம்.. கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் செல்லும் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ குணம் கொண்ட மூங்கிலரிசியை பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த மூங்கில் அரிசி கிலோவிற்கு 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாவதால் உள்ளூர் பழங்குடியின மக்கள் அதனை சேகரிக்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
40 ஆண்டுகள் முடிந்த மூங்கில்களில் இருந்து பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. பூ பூத்த சில வாரங்களில் அதில் இருந்து அரிசிகள் கொட்டத் துவங்கும். பின்னர் குறிப்பிட்ட நாட்களில் மூங்கில் செடிகள் காய்ந்து அழிந்து போய்விடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூங்கிலரிசியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதில் மாவுச்சத்துடன் புரதம், மெக்னீசியம், காப்பர், சிங்க் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. மூங்கிலரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருப்பதோடு, மூட்டுவலி, முட்டியில் நீர் கோத்துக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுவதாக பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.
தற்போது 50 சதவிகித மூங்கில் மரங்களில் ஆயுட்காலம் முடிந்துள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன் மூங்கில்களில் பூக்கத் தொடங்கியுள்ளன. அதிலிருந்து மூங்கிலரிசி உதிற துவங்கியுள்ளதால் அவற்றை சேகரிக்கும் பணியில் பழங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரியமாகவே பழங்குடியின மக்கள் தங்கள் உணவில் மூங்கிலரிசியை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து இவர்களிடம் மூங்கிலரிசியை வாங்கிச் செல்கின்றனர். மூங்கிலரிசி நெல்லாக கிலோ 500 ரூபாய்க்கும், அரிசியாக கிலோ 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் சீசன் முடிந்து விடும் என்பதால் அவற்றை பழங்குடி மக்கள் ஆர்வத்துடன் சேகரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்