'நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை'... 'டிராஃபிக் போலீசை கடித்த வேன் ஓட்டுநர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளருடன் வேன் ஓட்டுநர், கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை'... 'டிராஃபிக் போலீசை கடித்த வேன் ஓட்டுநர்'!

ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜய்காந்த் மற்றும சக காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக உச்சிப்புளி பகுதியிலிருந்து வந்த குட்டியானை வேன் ஒன்று விறகுக் கட்டைகளை அதிக அளவில் ஏற்றி வந்துள்ளது. இதையடுத்து அந்த வேனை ஆய்வாளர் விஜய்காந்த் நிறுத்த கூறியுள்ளார்.

குட்டியானை வேனின் ஓட்டுநர் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து ஆய்வாளர் விஜய்காந்த் வேனை விரட்டிப் பிடித்து, வேன் ஓட்டுநரை வேனிலிருந்து இறங்கச் சொல்லி கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போக்குவரத்து ஆய்வாளர், வேன் ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி கூட்டிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஓட்டுநர் பதிலுக்கு ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து இழுக்க, இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஆய்வாளர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் பயிற்சிக் காவலர் ஒருவரும் போக்குவரத்து ஆய்வாளரை மீட்க முயன்றனர். ஆனால், வேன் ஓட்டுநர் தனது பிடியை விடாமல் காவல் ஆய்வாளருடன் கட்டி உருண்டதுடன் அவரது கழுத்தில் பலமாகக் கடித்துள்ளார்.

இதைக் கண்ட பொதுமக்கள் ஓட்டுநரிடமிருந்து காவல் ஆய்வாளரை மீட்டனர். இதையடுத்து வேன் ஓட்டுநரான துத்திவலசையைச் சேர்ந்த கர்ணன் என்ற மாரியப்பனை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேன் ஓட்டுநரிடம் கடி வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜய்காந்த்  சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பரபரப்பு மிகுந்த கேணிக்கரை சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

FIGHT, TRAFFICPOLICE, DRIVER, RAMANATHAPURAM