1. தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சனிக்கிழமை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
3. உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், உ.பி. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
4. டெல்லி உட்பட வடமாநிலங்களில் லேசான நிலஅதிர்வு காணப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
5. குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
6. பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான் என்றாலும், வன்முறை செய்தது யார் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
7. 48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவை 20 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது.
8. தேசத் துரோக வழக்கில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்துவந்து சென்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
9. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
10. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில், பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
11. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில், 2-வது இடத்தில் உள்ள சவுரவ் கங்குலி, டேவிட் வார்னர் ஆகியோரை சமன் செய்துள்ளார்.
12. வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட எந்த நெட்வொர்க்கிலிருந்தும், ஏர்டெல் அல்லது ஜியோவுக்கு மாற்றி இணைப்பு பெறுவோருக்கு, ஒரு கிலோ வெங்காயம், ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று கோவை அன்னூரில் செல்ஃபோன் கடை ஒன்று அறிவித்துள்ளது.
13. சென்னையில் 3-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து, 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.13 ஆகவும் உள்ளது.
14. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.