'உங்க மனச ரெடி பண்ணுங்க'...'லைஃப் நல்லா இருக்கும்'...'தற்காப்பு கலையின்' பிதாமகன் பிறந்த தினம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜிம்க்கு செல்லும் பல இளைஞர்கள் கூறுவது ''எனக்கு புரூஸ் லீயை போன்று உடல் வேண்டும்'' என்று தான். உலக இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்த, அந்த ஒப்பற்ற கலைஞனின் பிறந்த தினத்தில் அவரை பற்றி நினைவு கூர்வது சால சிறந்தது.
உங்களது இலக்கை அடைய வேண்டுமா?, அதற்கு உடல் வலிமையை விட மன வலிமைதான் முக்கியம் என்பதை நிரூபித்து, அதற்கு ஏற்றாற் போல் வாழ்ந்து காட்டியவர் தான் புரூஸ் லீ. கூர்மையான பார்வை, மின்னல் வேகம், அசர வைக்கும் ஆற்றல், அசாத்திய திறமை, தேக்கு போன்ற உடற்கட்டு, இவற்றிற்கு மறு பெயர் தான் புரூஸ் லீ.
1940ம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இதே நாளில் சீன தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் மகனாகப் பிறந்தார் புரூஸ் லீ. சிறு வயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். மற்ற சிறுவர்களை போல தனது குழந்தை தனத்தை கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் அவர் படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
சிறு வயதிலேயே பார்ப்பதற்கு நன்கு வசீகர தோற்றத்தில் இருந்த புரூஸ் லீக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் 20க்கும் மேற்பட்ட சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோன்றினார். அதன் பிறகு பள்ளிப் படிப்பை முழுவதுமாக ஒதுக்கிய அவர், ஹாலிவுட்டில் தனது காலடியை பதித்தார். அங்கு நடித்த முதல் சீனர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
உடலும், மனதும் தான் ஒருவரது வாழ்க்கையை முழுவதுமாக தீர்மானிக்கிறது என்பதை தீர்க்கமாக நம்பிய புரூஸ் லீ, அதனை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, மற்றும் தற்காப்பு கலைகளில் ஆர்வம் செலுத்தினார். இவர் சுழற்றும் நான்சுக் என்ற நின்ஜாக்கின் வேகத்தை முறியடிக்க இன்றுவரை யாரும் இல்லை என்று கூறலாம். நின்ஜாக் மூலம் இவர் நடத்தும் தாக்குதலின் வேகம் ஆயிரத்து 600 பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து புரூஸ் லீ நடித்த படங்கள் அவருக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று தந்தது. பிக் பாஸ், ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி, என்டர் தி டிராகன் போன்ற படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. சினிமாவில் கவனம் செலுத்தினாலும் தற்காப்பு கலைகளில் அவருக்கு இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை. புரூஸ் லீயின் டூ ஃபிங்கர் புஷ் அப்ஸ் எனப்படும் 2 விரல்களை மட்டும் வைத்து புஷ் அப் எடுப்பது மற்றும் ஒன் இன்ச் பஞ்ச் ஆகியவை உலகப்புகழ் பெற்றவை.
புரூஸ் லீயின் ''ஒன் இன்ச் பஞ்ச்'' உலக குத்துச் சண்டை சாம்பியனின் வேகத்தையும், ஆற்றலையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எதிராளியை கிட்டத்தட்ட 15 அடி தூரத்திற்கு தள்ளி விட புரூஸ் லீயால் மட்டுமே சாத்தியம். 33 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்த போதும், ''வாழ்ந்தா புரூஸ் லீ போல வாழனும்யா'' என்ற கூற்றை மெய்ப்பித்து சென்றிருக்கிறார். உலகிற்கு பல்வேறு தத்துவங்களை விட்டு சென்ற அவர், எந்த ஒரு நாட்டுக்கும் தற்காப்புக் கலை சொந்தமானது இல்லை என்பதை தீர்க்கமாக நம்பினார்.
கலைகளுக்கு எப்படி அழிவு இல்லையோ, அது போன்று அந்த கலைகளின் பிதா மகனுக்கும் அழிவு என்பதே இல்லை. மீண்டும் நீ பிறக்கமாட்டாயா என்ற ஏக்கத்தில், ''ஒரு ரசிகனாக 'வி மிஸ் யூ 'லீ''