‘இட்லி வேணுமாம்.. ஃபேன் போடலன்னா தூங்காது’.. ஆதார் கார்டு வாங்கப்பட வேண்டிய அதிசய கன்றுக்குட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆம்பூர் அருகே உள்ள வீடு ஒன்றில் வளரும் அதிசயக் கன்றுக்குட்டி செய்யும் சேட்டைகள் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது குடும்பம் பசுமாடு வளர்த்துவருகிறது. இந்த பசு ஈந்த 3 மாத கன்றுக்குட்டி இப்போது தாய் பசுவுடன் பெருவாரியான நேரங்களில் இருக்காமல், ஆனந்தனின் குழந்தைகளுடன் விளையாடுவது, இட்லி சாப்பிடுவது உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதோடு மனிதர்களைப் போலவே நடந்துகொள்வதால் இந்த குடும்பத்தினர் வியந்து போயுள்ளனர்.
குறிப்பாக வீட்டு ஹால் மற்றும் தனி அறைகளில் பாய் விரிக்கப்பட்டிருந்தால், அங்கு சென்று தலையணைகளில் தலை வைத்து படுத்து தூங்குவது, அதுவும் ஃபேன் போடவில்லை என்றால், தூங்காமல் அறப்போராட்டம் செயவது, டிவி-யில் பாட்டு ஓடுவதைப் பார்த்து மூவ்மெண்ட்ஸ் கொடுப்பது, ஆனந்தனின் குடும்பத்தினர் சாப்பிடும்போது தானும் சேர்ந்து, ஒரு தட்டில் இட்லி சாப்பிடுவது உள்ளிட்ட சேட்டைகளை இந்த கன்று செய்வதைப் பார்த்து அந்த ஊரே விநோதமாக பார்க்கத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி பேசிய அந்த குடும்பத் தலைவர் ஆனந்தன், அந்த கன்றுக்குட்டி தங்கள் வீட்டில் ஒருவராகவே மாறி வளர்வதால், தங்கள் குழந்தைகள் அந்த கன்றுக்குட்டிக்கு ஒரு ஆதார் கார்டு எடுக்கச் சொல்லுவதாகவும் கூறி சிரிக்கிறார். இத்தனை அன்புமிக்க இந்த கன்றுக்குட்டியை இந்த குடும்பத்தினர் தங்கள் பிள்ளையைப் போல் பார்த்து வருகின்றனர்.