ஏன் இந்த பணம் மட்டும் ‘டெபாசிட்’ ஆகல..? சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘அடுத்த’ அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாட்டைச் சேர்ந்தவர் ஹிந்தேஷ் ஆனந்த்(33). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள ஓணாப்பாளையத்தில் சொந்தமாக 15 சென்ட் இடம் உள்ளது. இதைப்பார்க்க அவர் நேற்று முன்தினம் வடவள்ளிக்கு வந்துள்ளார். நிலத்தை பார்வையிட்ட பின்னர், தன்னிடம் இருந்த 1 லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் தொகையை, டெபாசிட் செய்ய அப்பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் தொகையை செலுத்தியுள்ளார். அதில் 20 ஆயிரம் ரூபாய் தொகையை (40, 500 ரூபாய் நோட்டுகள்) மட்டும் இயந்திரத்தில் அவரால் செலுத்த முடியவில்லை. இதனை அடுத்து அந்தத் தொகையை மட்டும் வங்கியில் இருந்த காசாளரிடம் கொடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்த படிவத்தையும் அளித்தார். காசாளர் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, அது கள்ளநோட்டு என தெரியவந்துள்ளது. உடனே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே வங்கிக்கு விரைந்து வந்த போலீசார் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஹிந்தேஷ் ஆனந்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஊட்டியை சேர்ந்த மதன்லால் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அவர் கொடுத்த பணத்தைதான் வங்கியில் செலுத்த வந்ததாகவும் ஹிந்தேஷ் ஆனந்த் கூறியுள்ளார். இதை அடுத்து ஹிந்தேஷ் ஆனந்தை அழைத்துக் கொண்டு மதன்லாலை விசாரிக்க போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்