தமிழகத்தில் மீண்டும் 'ஊரடங்கு' அமல்படுத்தப்படுமா...? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்த முக்கிய தகவலை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று (04-12-2021) நடைபெற்றது. அங்கு வந்த சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முகாமை பார்வை இட்டபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 'ஓமிக்ரான் குறித்து பதற்றம் வேண்டாம். ஆனால் அதை தடுக்க இரு தவணை தடுப்பூசி போடுவது மிக முக்கியம். தனிநபர் இடைவெளி, மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.
மேலும், ஊரடங்கால் 2 வருடங்கள் பட்ட துன்பங்கள் போதும். சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு மேலும் அமல்படுத்தும் சூழல் இல்லை. ஆனால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்