எஜமானரைக் காப்பாற்ற, பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு தானும் உயிரைவிட்ட நாயின் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சையில் பாம்பிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்ற முயன்ற நாய் ஒன்று வெற்றிகரமாக எஜமானரைக் காப்பாற்றிவிட்டு, ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, தான் உயிரிழந்துள்ள நெஞ்சைப் பிழியும் சம்பவம் நடந்துள்ளது.

எஜமானரைக் காப்பாற்ற, பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு தானும் உயிரைவிட்ட நாயின் சோகம்!

தஞ்சையில் உள்ள வேங்கராயன் குடிக்காடு பகுதியில் உள்ளவர் நடராஜன் எனும் 55 வயதான நபர்.  இவருக்கு தேவகி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். பப்பி என்கிற பெயருடன் நடராஜன் வீட்டில் வளர்ந்த இந்த ஆண் நாய்க்குட்டி, கிட்டத்தட்ட நடராஜன் வீட்டில் ஒரு பிரியத்துக்குரிய ஒரு ஜீவனாகவே மாறியது.

நடராஜனுடன் தினமும் காலை, மாலை நடைபயிற்சிக்கு சென்றுவருவது, நடராஜனின் வீட்டைக் காப்பது உள்ளிட்டவற்றை செய்துகொண்டு சுற்றித் திரிந்த பப்பி, நடராஜனுடன் அவரது தோட்டத்துக்குச் சென்றுள்ளது. அங்கு வந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடராஜனை கடிப்பதற்காக சீறியது.

அப்போது இதைக் கவனித்துவிட்ட பப்பி நாய் பாய்ந்து சென்று தன் எஜமானரைக் காப்பாற்றும் விதமாக பாம்புடன் சண்டையிடத் துவங்கியுள்ளது. ஆனால் பாம்பு முட்புதருக்குள் செல்ல முற்பட்டபோதும், பப்பி பாம்பினை விடாமல் பிடித்திழுத்து சண்டையிட்டு, கடித்துக் கொன்றுள்ளது.

ஆனால், என்னதான் தன் எஜமானரை சீண்டிய பாம்பை தண்டிக்க வேண்டும் என்று விஸ்வாசமான பப்பி நினைத்தாலும், அது கடித்துக் கொன்றது நல்ல பாம்பையாச்சே. அதனால் துரதிர்ஷ்ட வசமாக பப்பி நாய்க்குட்டி இறந்தே போய்விட்டது. இந்த சம்பவம் நடராஜன் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாது, அப்பகுதியினரையே பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.

DOGSLIFE, BIZARRE, SAD