'25 பவுன் தானே போட்டீங்க?'.. ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் எடுத்த பதைபதைக்க வைக்கும் முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமத்தில் இருந்து வந்து, சென்னை பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வரும் சதீஷ் என்பவரின் மனைவி ரம்யா.
இருவருக்கும் கடந்த 2016 செப்டம்பர் மாதம் திருமணமான நிலையில், இருவருக்கும் ஒன்றரை வயதில் அஸ்வதி என்கிற பெண் குழந்தை இருந்து வந்த நிலையில், ரம்யாவின் மாமனார் ராஜேந்திரனும், மாமியார் தனலட்சுமியும் 3 பவுன் நகை கேட்டு ரம்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே 25 பவுன் நகை கொடுத்த ரம்யா, மீண்டும் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்ட விஷயத்தை தன் குடும்பத்தார் யாரிடமும் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாதென்கிற யோசனையில் தவித்திருந்துள்ளார். இதனிடையே கணவர் வேலைக்கு செல்ல, மாமியாரும் மாமனாரும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு செல்ல, வீட்டில் தனியாக இருந்த ரம்யா, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ள மனமின்றி, முதலில் குழந்தையை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த ரம்யாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ரம்யாவின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ரம்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் நேரில் வந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே ரம்யா வரதட்சணை கொடுமையினால்தான் இறந்ததாகவும், அதற்கு காரணமானவர்களை தண்டிக்குமாறும் ரம்யாவின் உறவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.