'3-வது அலையை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது '... மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்கள். அதே நேரத்தில் 3-வது அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி தற்போது அடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் 3-ஆவது அலையை எதிர்கொள்ளக் குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருக்கிறது.
குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும், 4-ல் ஒரு பகுதி செவிலியர்களை அவசரக் கால பணிக்காக இப்போதே தயார்ப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களும் கொரோனாவின் 3ஆவது அலையை எதிர்கொள்ள எந்தநேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா 3வது அலையின்போது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு முன்கூட்டியே தெரிவித்திருக்கிறது.
இளம் வயதில் இருப்பவர்கள் மத்தியில் இன்னும் சிலரிடம் கொரோனா குறித்த தவறான புரிதல் காணப்படுகிறது. கொரோனா என்ற ஒரு வியாதியே இல்லை எனவும் பலர் மிகவும் அஜாக்கிரதையாக இருந்து வருகிறார்கள். தற்போது 3-வது அலை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களைத் தாக்கும் என்பதால் அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அதேநேரத்தில் கொரோனா தடுப்பு விதிகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆகியவையே 3வது அலையின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்