'வெளிநாட்டில் படிக்கப் போன தமிழக மாணவி'... 'நடுரோட்டில் மர்மநபரால் நடந்த கொடுமை'... 'நிலைகுலைந்துப் போன பெற்றோர்’... ‘நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கனடாவில் உயர்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவி ஒருவர், மர்மநபரால் நடுரோட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சலின் ரேச்சல் ஆல்பர்ட். 23 வயதான இவர் கனடா நாட்டில் டொரன்டோ நகரில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சப்ளை செய்ன் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு ஆஞ்சலின் ரேச்சல் வழக்கம்போல் பல்கலைக்கழகத்தில் வகுப்பை முடித்துவிட்டு மாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆஞ்சலின் ரேச்சலை கண்மூடித்தனமாக சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டு நிலைகுலைந்து போயுள்ளார். இதைப்பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்க, விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவத்தை கேட்டு, பதறிப்போன பெற்றோர் கனடா செல்ல சென்னைக்கு விரைந்துள்ளனர். இதுகுறித்துக்கு அருகில் உள்ளவர்கள் கூறுகையில், `கனடாவில் படித்துவரும் ஆல்பர்ட்டின் 2-வது மகள் ஆஞ்சலின் ரேச்சலுக்கு இப்படி ஒரு துயரம் நடந்ததை கேள்விப்பட்டதும், அவரது பெற்றோர் நிலைக்குலைந்து போயினர்.
மகளை பெரிய ஆய்வாளராக்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்றனர். மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர் குறித்து கனடா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. இந்த மே மாசம் படிப்பு முடிந்து பட்டம் பெற்று நாடு திரும்புவார் மகள் ஆஞ்சலினா என்று ஆவலுடன் காத்திருந்த பெற்றோர் தலையில் இப்படி ஒரு இடி இழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் `ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்' எனப் பதிவிட்டுள்ளார். குன்னூர் மக்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Deeply shocked to learn of the serious attack on Rachel Albert, an Indian student in Toronto, Canada. Am asking MEA officials to help with her family’s visa. Family members may immediately contact us on +91 9873983884. https://t.co/wPno3V5aTv
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 24, 2020